
கலைஞர் மு.கருணாநிதி கதை- வசனம் எழுதிய 'தூக்குமேடை' படத்தில், சந்திரசேகர் நடித்தார். 20 பக்க வசனத்தை ஒரே 'டேக்'கில் பேசி நடித்தார்.
கலைஞரை சந்தித்தபோது நிகழ்ந்த சம்பவங்கள் பற்றி சந்திரசேகர் கூறியதாவது:-
'நான் தலைவரை (கலைஞர்) மிக அருகில் சந்தித்தது அப்போதுதான். பார்த்ததுமே என்னிடம் ரொம்ப நாள் பழகியவர் போல பேசத்தொடங்கி விட்டார். 'சுமை', 'சிவப்பு மல்லி', 'பாலைவனச்சோலை' படங்களெல்லாம் பார்த்தேன். ரொம்ப அருமையாக நடிக்கிறாய்' என்று பாராட்டினார். இப்படிப் பாராட்டியதோடு நில்லாமல், 'சிவாஜி, எஸ்.எஸ்.ஆருக்குப் பிறகு நல்ல தமிழை உன் மூலம் கேட்க முடிகிறது. நல்ல தமிழ் பேசும் நடிகராகத் தமிழ்நாட்டுக்கு கிடைத்திருக்கிறாய்' என்று கூறினார். அப்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியையும், பரவசத்தையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.
கொஞ்சம் இடைவெளியில், என் குடும்பம் பற்றியெல்லாம் அக்கறையுடன் விசாரித்தவர், என்னை அழைத்த நோக்கம் பற்றி பேசினார். 'தூக்குமேடை நாடகத்தை திரைப்படமாக எடுக்கலாம் என்றிருக்கிறேன். நீ நடித்தால் அதை படமாக எடுக்கலாம்' என்றார்.
'நீங்கள் இப்படி கேட்டதற்கு பதிலாக, `நீ நடிக்க வேண்டும்' என்று உத்தரவே போட்டிருக்கலாம். அதை என் பாக்கியமாக கருதி நடிப்பேன். நான் இப்படி உரிமையுடன் சொல்லக்காரணம், நானும் உங்கள் கட்சியைச் சேர்ந்தவன்' என்றேன்.
கலைஞர் என்னை ஆச்சரியமாக பார்த்தார். 'உன் படங்களைப் பார்த்து நீ கம்ïனிஸ்டு என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன். நம் ஆளா? மகிழ்ச்சி. மகிழ்ச்சி' என்றார்.
'தூக்கு மேடை' படத்தில் நான் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டது. மறுநாளே பத்திரிகையாளர் சந்திப்பில் 'தூக்கு மேடை' படத்தில் நான் கதாநாயகனாக நடிக்கும் தகவலை சொன்னார் கலைஞர்.
தூக்குமேடை நாடகமாக நடிக்கப்பட்டபோதே அதற்கு பக்கம் பக்கமாக வசனம் உண்டு என்பது எனக்குத் தெரியும். படத்திலும் அதே வசனங்கள்தானே.
படப்பிடிப்பு தொடங்கி, மோகன் ஸ்டூடியோவில் காட்சிகள் படமாகிக் கொண்டிருந்தன. ஒருநாள் நான் ஒரே டேக்கில் 20 பக்க வசனம் பேசும் காட்சியை எடுக்க இருந்தார்கள். இப்போது மாதிரி முதலில் நடித்து விட்டு பிறகு 'டப்பிங்' பேசும் வசதியெல்லாம் அப்போது கிடையாது. நடிக்கும்போதே, வசனத்தை பேசியாக வேண்டும். நான் வசனம் பேசத் தயாராக இருந்தபோது, தலைவர் திடீரென்று வந்துவிட்டார். அவரைப் பார்த்ததும் எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அவரிடம், 'தலைவரே! உங்கள் முன்னாடி பேசினால் தடுமாறி விடுவேன்' என்றேன்.
அவரும் புரிந்து கொண்டார். டைரக்டர் அமிர்தத்தை அழைத்து, 'நல்லபடியா பண்ணுங்க' என்றவர், சில ஆலோசனைகளை கொடுத்து விட்டு செட்டில் இருந்து கிளம்பிப் போனார்.
அடுத்த கணமே 20 பக்க வசனத்தையும் ஏற்ற இறக்கத்தோடு ஒரே டேக்கில் பேசி முடித்து விட்டேன். அந்த சந்தோஷத்தில் ஒரு காபி சாப்பிடலாம் என்று செட்டுக்கு வெளியே வந்தால், `ஹெட்போனை' தலையில் மாட்டியபடி நான் பேசிய வசனத்தை தலைவர் கேட்டுக்கொண்டிருந்ததை கண்டு எனக்கு ஆனந்த அதிர்ச்சி ஏற்பட்டது. தனது படைப்புக்கு உயிர் கொடுக்கும் வசனம் எந்த மாதிரி வந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்பிய அவருடைய ஆர்வத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன்.
இந்தப்படம் வளரும்போது எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் கலைஞரின் படத்தில் நான் நடித்ததால், 'சந்திரசேகருக்கு எதற்கு கட்சி முத்திரை?' என்ற சலசலப்பும் ஏற்பட்டது. 'இந்தப் படத்தில் நடிக்கக்கூடாது' என்று போனில் சிலர் மிரட்டவும் செய்தனர். நான் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. 'நான் தி.மு.க. காரன். என் தலைவர் அழைத்து நடிக்கச் சொன்னார்; நடிக்கிறேன். அதற்கு எந்த மாதிரியான எதிர்ப்பு வந்தாலும் சந்திக்க தயார்' என்று பதில் சொன்னேன்.
'முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரை ஒருமுறை சந்தித்துப் பேசுங்கள்' என்று அன்றைய அமைச்சர் ஒருவர் கூட போனில் என்னிடம் கூறினார்.
இப்படி நான் உறுதியாக நின்றதால் கலைஞருக்கு என் மீது ரொம்பவே பிரியமாகி விட்டது. தூக்குமேடை ரிலீசான பிறகு `தலைவர்' என்பதையும் தாண்டி 'அப்பா' என்று அழைக்கும் அளவுக்கு நானும் அந்த அன்பில் ஐக்கியமாகி விட்டேன்.
இப்படி தலைவருடன் நெருக்கம் காட்டிய பிறகு, முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கலந்து கொள்ளும் விழாக்களை தவிர்த்தேன். விசு டைரக்ஷனில் பெரும் வெற்றியை எட்டிய ஏவி.எம்.மின் 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தின் விழாவுக்கு கூட நான் போகாததற்கு இதுதான் காரணம்.
இருந்தாலும் ஏவி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு போயிருந்தபோது அவரிடம் மாட்டிக்கொண்டேன்! நான் டைரக்டர் ஆர்.சி.சக்தியுடன் மண்டபத்துக்குள் நுழைந்த நேரத்தில், முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். காரில் வந்து இறங்கினார். மண்டப வாயிலில் அவருக்கு முன்னதாக போய்விட்ட நான், மேற்கொண்டு அவர் போவதற்காக ஒதுங்கி நிற்கும்படி ஆயிற்று. அப்போது என் அருகில் நடிகர் சாருஹாசன், டைரக்டர் ஆர்.சி.சக்தி, கதை-வசன கர்த்தா ஏ.எல்.நாராயணன் ஆகியோர் இருந்தார்கள்.
எம்.ஜி.ஆர். எங்களை தாண்டிச் சென்றபோது, முதலில் சாருஹாசன் அவருக்கு வணக்கம் செய்ய, பதிலுக்கு எம்.ஜி.ஆரும் வணங்கினார். அடுத்தவர் ஆர்.சி.சக்தி, அவரும் வணங்க, எம்.ஜி.ஆரும் வணங்கினார். மூன்றாவதாக என் முறை! இப்போது அவரைப் பார்த்து கைகுவித்தேன். 5 நொடிகள் என்னையே உற்று நோக்கியவரிடம் வேறு எந்தவித ரியாக்ஷனும் இல்லை. என் அருகில் நின்ற ஏ.எல்.நாராயணனை அழைத்துக்கொண்டு மண்டபத்துக்குள் போய்விட்டார்.
அரசியலில் `எதிரும் புதிரும்' நிலை சகஜம். கலைஞரும், எம்.ஜி.ஆரும் கலைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். கலைத்துறையில் இருந்தபோது மிகச்சிறந்த நண்பர்களாகவும் இருந்தார்கள். அரசியலுக்கு வந்த பிறகும் நீடித்த நட்பு, ஒரு காலகட்டத்தில் பிரிவில் முடிந்தது. அந்த மாதிரியான காலகட்டத்தில், எதிர்க்கட்சி தலைவரின் விருப்பம் ஏற்று நான் அவரது லட்சியப்படைப்பான `தூக்குமேடை' படத்தில் நடித்ததை முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரிடம் யாராவது முரண்பட்ட கண்ணோட்டத்தில் சொல்லியிருக்க கூடும். அதைத்தொடர்ந்து என்னை சந்திக்க விரும்பி விடப்பட்ட அழைப்பையும் தவிர்த்து விட்டதால், இயல்பாக என் மீது அவருக்கு கோபம் இருந்திருக்கலாம். அதனால்தான் அன்றைய திருமண மண்டபத்தில் என்னைப் பார்த்ததும் ஒன்றும் பேசாமல் போயிருக்கலாம். அரசியலில் இதெல்லாம் சகஜம்தான் என்று, எம்.ஜி.ஆரின் அன்றைய மவுனத்தை எடுத்துக்கொண்டேன்.
'தூக்குமேடை' படத்தில் நடித்த பிறகு, தேர்தல் கூட்டங்கள், மாநாடுகள் என்று தி.மு.க. மேடையில் பேசத்தொடங்கினேன். வாரம் ஒரு முறை தலைவரை சந்திப்பேன். கடந்த 25 வருஷமாய் என் ஒவ்வொரு பிறந்த நாளிலும் குடும்பத்துடன் அவரை சந்தித்து வாழ்த்து பெறுவதையும் வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறேன்.'
இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.
டைரக்டர் கிருபாசங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த மணிவண்ணன் 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் இருந்து பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தார். அவரிடம் தொடர்ந்து நாலைந்து படங்கள் பணியாற்றிய பிறகு 'கோபுரங்கள் சாய்வதில்லை' படம் மூலம் இயக்குனரானார். அந்தப் படம் அவருக்குப் பெரிய பெயர் வாங்கித் தந்தது.
மணிவண்ணன் இயக்கிய 'இங்கேயும் ஒரு கங்கை' படத்தில் சந்திரசேகருக்கு `பாகப்பிரிவினை' சிவாஜி மாதிரி அற்புதமான வேடம். இந்தப்படம் சந்திரசேகரின் நடிப்பை புதிய கோணத்தில் வெளிப்படுத்தி ரசிகர்களை ரசிக்க வைத்தது. மணிவண்ணனுக்கும் தனக்குமான நட்பு பற்றி சந்திரசேகர் கூறியதாவது:-
'நானும் மணிவண்ணனும் சென்னையில் சுற்றாத இடமே இல்லை. நடிப்பதற்கு நானும், இயக்குனராவதற்கு அவரும் முயன்ற அந்த காலக்கட்டத்தில் எங்களையும் ஒருவர் வாழ்த்தி பசியும் ஆற்றினார். அவர் பட அதிபர் கே.ஆர்.ஜி. எங்கள் சினிமா தாகத்தைப்பற்றி முழுக்க தெரிந்தவர் அவர். எப்போதாவது ரொம்பவே பண நெருக்கடி ஏற்பட்டால், நடந்தே போய் அவரை பார்ப்போம்.
'வணக்கம் முதலாளி' என்போம். எங்கள் பட விஷயங்களை ஆர்வமாய் கேட்பவர், 'நல்ல வருவீங்கடா! தன்னம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்கள்' என்பார். அப்படிச் சொல்வதோடு மட்டும் நின்று விடாமல்
500 ரூபாய் பணத்தை எடுத்து எங்கள் கையில் திணிப்பார்.
1975-ம் வருடவாக்கில் 500 ரூபாயின் மதிப்பு மிக அதிகம்.
சினிமாவில் வளர்ந்த நிலையில் நானும் மணிவண்ணனும் இப்போது சந்தித்துக் கொண்டாலும், எங்கள் எதிர்காலத்தை `வாழ்த்தாக' முன்கூட்டியே சொன்ன தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. பற்றி மறக்காமல் நினைவு கூர்வதுண்டு. சினிமாவில் நான் சந்தித்த அபூர்வ மனிதர் கே.ஆர்.ஜி.'
இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.
திரைப்பட கல்லூரியில் பயின்ற இளைய தலைமுறை கலைஞர்களை ஊக்குவித்தவர், சந்திரசேகர். அடையாறு திரைப்படக் கல்லூரியில் படித்து விட்டு இயக்கும் நோக்கத்துடன் படத் தயாரிப்பாளர்களை சந்தித்து கதை சொல்லிக் கொண்டிருந்தார், சின்னச்சாமி என்ற இளைஞர்.
புதியவர்கள், அதுவும் மாணவர்களாக இருந்து சினிமாவில் கற்றவர்கள் என்பதால் திரைப்படக் கல்லூரி மாணவர்களை வைத்து படம் இயக்க தயாரிப்பாளர்கள் தயங்கினார்கள். சந்திரசேகர் படப்பிடிப்பில் இருந்த நேரத்தில் நண்பர் ஒருவர், 'திரைப்படக் கல்லூரி மாணவர் ஒருவர் ஒரு கதை வைத்திருக்கிறார். கேளுங்கள்' என்று சொல்லி அந்த மாணவரை அனுப்பி வைத்தார். அன்றைய படப்பிடிப்பு முடிந்து சந்திரசேகரும் கதை கேட்டார். 21/2 மணி நேரமும் கதை சொன்ன திரைப்படக் கல்லூரி மாணவரான சின்னச்சாமி, சந்திரசேகரை ரொம்பவே ஆச்சரியமாய் உணரவைத்தார். இதுபற்றி சந்திரசேகர் கூறுகிறார்:-
'சின்னச்சாமி சொன்னது அதுவரை நான் கேட்டிராத கதை. படத்தில் வருகிற மாதிரி காட்சி காட்சியாக வரிசைப்படுத்தி கதை சொன்னார். கதை கேட்டு முடித்ததும், நான் அவரிடம் 'நீங்க சொன்னதுல பாதியை படமா எடுத்தாக்கூட படத்துக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்' என்றேன்.
நான் விஜயகாந்திடம், 'இன்ஸ்டிïட் மாணவர் சொன்ன கதை அற்புதம். நீங்கள் கதாநாயகனாக நடித்தால் உங்கள் சினிமா கேரியரில் பெரிய மாற்றம் ஏற்படும்' என்றேன்.
விஜயகாந்த் என் வார்த்தையை நம்பினார். கால்ஷீட் கொடுத்தார். படம் 'ஊமை விழிகள்' என்ற பெயரில் தயாராகி திரைக்கு வந்தபோது, பிரமாண்ட வெற்றியை அடைந்தது. சின்னச்சாமி என்ற அந்த இயக்குனர் `ஆபாவாணன்' என்ற பெயரில் பிரபலமானார். அவரது அடுத்த படமான 'செந்தூரப்பூவே' படமும் விஜயகாந்துக்கு பெரிய வெற்றி தேடித்தந்தது. இந்தப் படங்களில் எனக்கும் முக்கிய கேரக்டர் கிடைத்து, பெயரும் கிடைத்தது.
இதன் பிறகு திரைப்படக் கல்லூரி மாணவர்களை வைத்து 'உழவன் மகன்' என்று சொந்தப்படமே எடுத்தார், விஜயகாந்த். அதுவும் வெற்றி.
இந்த வகையில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் சினிமாவுக்குள் அடியெடுத்து வைக்க ஒரு வகையில் நான் காரணமாக இருந்ததில் இன்றளவும் எனக்கு பெருமைதான்.'
இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.

0 comments
Post a Comment