ஜவகர்லால் நேரு உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் 1889-ஆம் ஆண்டு நவம்பர் 14-இல் செல்வந்தரும் வழக்குரைஞருமான மோதிலால் நேருவுக்கும், சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக பிறந்தார்.
சிறுவயதிலேயே ஜவகர்லால் நேருவுக்கு இந்தி மொழி, சமஸ்கிருதம் மற்றும் இந்தியக் கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. மோதிலால் நேரு, இந்தியக் குடிமக்கள் சேவைக்குத் தன் மகன் தகுதி பெறவேண்டும் என்று விரும்பி, அதற்காக அவரை இங்கிலாந்தில் உள்ள ஹார்ரோவிற்கு அனுப்பினார்.
ஜவகர்லால் நேரு, ஹார்ரோவிலுள்ள பள்ளி வாழ்க்கையை முற்றிலும் விரும்பவில்லை. இருந்தாலும் பள்ளிப் படிப்பை முடித்ததும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழக நுழைவுத் தேர்வுகளை 1907 இல் எழுதி, திரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார். 1910 அக்டோபர் இன்னர் டெம்பிளில் சட்டம் பயில பதிவு செய்து கொண்டார்.
ஹார்ரோ மற்றும் கேம்பிரிட்ஜில் அவர் விரும்பியோ, கவரப்பட்டோ சட்டம் பயிலவில்லை. மாறாக தந்தையின் வேண்டுகோளுக்காகப் படித்தார். நேரு இறுதித்தேர்வில் 1912இல் வெற்றி பெற்று, ஆண்டு இறுதியில் சட்டத்துறைக்கு அழைக்கப்பட்டார். சட்டப் பணிசெய்ய விரைவில் இந்தியா திரும்பினார்.
1916-ஆம் ஆண்டு கமலா கவுல் என்ற 16 வயது நிரம்பிய பெண்ணை மணந்தார். அவர்களுக்குத் திருமணம் ஆன அடுத்த ஆண்டில் இந்திரா பிரியதர்ஷினி என்ற மகள் பிறந்தாள். பின்னாளில் அவர் ஃபெரோஸ் காந்தியை மணம் புரிந்ததால் இந்திரா காந்தி என்றழைக்கப்பட்டார். கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் ஆர்வமாக செயல்பட்டார். ஆனால் 1936 இல் புற்றுநோயால் இறந்தார். அதன்பின் நேரு கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார்.
1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளை சந்தித்தார். 1919 இல் ஜாலியன் வாலாபாக்கில் ஆயுதம் ஏதும் இன்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவை காங்கிரஸ் கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ள காரணமாக இருந்தது. நேரு விரைவாக காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார்.
1920 ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக 1921 ல் நேரு முதல் முறையாக சிறைக்கு சென்றார். 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு விடுவிக்கப்பட்டார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும், அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டி வந்தது.
சிறையில் இருந்த நாட்களில், நேரு உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். இந்த படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்ததுடன், இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது.
முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். ஜவகர்லால் நேரு, இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரசின் இடதுசாரி தலைவரானார்.
நேரு துடிப்புமிக்க, புரட்சித்தலைவராக, ஆங்கில அரசின் பிடியிலிருந்து முழுமையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார். ஆகஸ்ட் 15, 1947 புதுடெல்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் பழமையையும், அமைப்பையும் செதுக்க அவருடைய நீண்டகால பதவி ஒரு கருவியாகப் பயன்பட்டது. சில சமயங்களில் இவரை ‘நவீன இந்தியாவின் சிற்பி’ என்று குறிப்பிடுவதுண்டு.
இவருடைய மகள் இந்திரா காந்தி மற்றும் பேரன் ராஜீவ் காந்தியும், இந்தியாவின் பிரதம மந்திரிகளாக இருந்திருக்கிறார்கள். தேர்தலில் நேரு காங்கிரசை மிகப்பெரிய வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆனாலும் அவருடைய அரசு விமர்சனங்களை எதிர்கொண்டது.
உள்கட்சி ஊழல்கள் மற்றும் சுரண்டல்களால் வெறுத்துப்போன நேரு பதவியை துறக்க நினைத்தாலும் தொடர்ந்து சேவை செய்தார். 1953 நேருவின் ஆரோக்கியம் குறைந்து வந்ததால் மாதக் கணக்கில் அவர் காஷ்மீரில் கட்டாய ஓய்வுக்காகத் தங்க வேண்டி வந்தது.
சில வரலாற்றாளர்கள் இதை சீன ஊடுருவலில் இருந்து தப்பிக்க நடத்தப்பட்ட நாடகமாக கதை கட்டி எழுதியதை, நேரு நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட துரோகமாகக் கருதினார். 1964 இல் காஷ்மீரில் இருந்து திரும்பியதும் நேரு பக்கவாதத்தாலும், மாரடைப்பாலும் அவதிப்பட்டார்.
அவர் 1964 மே மாதம் இதே நாளில் அதிகாலை இறைவனடி சேர்ந்தார். அவர் பூதவுடல் இந்து சடங்குகள் முறைப்படி யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது. டெல்லித் தெருக்களில் இருந்தும், மயானத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
Monday, May 26, 2014
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964
Posted by
Anonymous
at
9:17 PM
Tags :
பலதும் பத்தும்


0 comments
Post a Comment