Pages

Thursday, May 29, 2014

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற பொண்டி தமிழ்ச்சங்க இல்ல மெய்வல்லுநர் போட்டி!

(பகுதி - 1) பிரான்சு பொண்டி தமிழ்ச் சங்கம் 3 ஆவது தடவையாக நடாத்திய இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை பொண்டி நகரில் அமைந்துள்ள Stade Robert Gazzi மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில்  மங்களவிளக்கேற்றலைத் தொடர்ந்து பிரதமவிருந்தினர்கள், மாணவர்களும் பெற்றோரும் அணிவகுத்து நிற்க, மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட பந்தலுக்கு பொண்டி தமிழ்ச்சங்கப் பிரதிநிதிகளினால்  அழைத்துவரப்பட்டனர். பொதுச் சுடரேற்றலைத் தொடர்ந்து அகவணக்கம், மலர்வணக்கம் இடம்பெற்றன.

பிரான்சு தேசியக் கொடி மற்றும் பொண்டி தமிழ்ச்சங்கக் கொடி ஏற்றலைத் தொடர்ந்து தமிழ்ச்சோலை கீதம் இசைக்கப்பட்டது. வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து பொண்டி நகரபிதா Mme. Sylvine THOMASSIN, மாநாகரசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் உடற்பயிற்சி பார்வையாளர்களைக் கவர்ந்தது. தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின. பாரதி இல்லம், வள்ளுவர் இல்லம், ஒளவையார் இல்லம் என மூன்று இல்லங்கள் பிரிக்கப்பட்டு குறித்த இல்லங்களுக்கு இடையில் போட்டிகள் இடம்பெற்றன. ஓட்டம், பந்து மாற்றுதல், கயிறு அடித்தல், உருவ அமைப்பு செய்தல், ஊசி நூல் கோர்த்தல், பழம் பொறுக்குதல், நின்று பாய்தல், போத்தல் நடை, சாக்கு ஓட்டம், கரண்டி தேசிக்காய் ஓட்டம், விநோத உடை, கயிறு இழுத்தல் என பல்வேறு வகையான போட்டிகள் மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தன.

விநோத உடைப்போட்டியில், மாணவர்கள் பல்வேறு வேடங்களில் வந்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர். நடுவர் கேட்ட கேள்விகளுக்கு விநோத உடையில் இருந்த மாணவர்கள் அந்தப் பாத்திரங்களாகவே பதிலளித்தமை எல்லோரது கைகளையும் தட்டவைத்தது.

கயிறுத்தலில் ஆண்கள் பிரிவில் இளைஞர் அணி வெற்றிபெற்றது. பெண்கள் பிரிவில் பெற்றோர் அணி வெற்றிபெற்றது.

இல்லங்களில், பாரதி இல்லம் (சிவப்பு) 231 புள்ளிகள் , வள்ளுவர் இல்லம் (மஞ்சள்)  196 புள்ளிகள் , ஒளவையார் இல்லம் (நீலம்) 177 புள்ளிகள் என்ற ஒழுங்கில் பெற்றன.

வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றதைத் தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளரின் சிறப்புரை இடம்பெற்றது.

அவர் தனது உரையில், எத்தனை துன்பங்கள், துயரங்களைத் தாண்டி தமிழ்ச் சங்கங்கள் தமது பயணத்தைத் தொடர்கின்றன. அவ்வாறே பொண்டி தமிழ்ச் சங்கத்தின் பயணமும் உள்ளது. இது உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் பெருமைகொள்ளவேண்டிய விடயம். கடந்த கால மனக் கசப்புகளையும் தாண்டி இந்தச் சங்கமானது சரியான பாதையில் தனது இலட்சியப் பாதையில் வரலாற்றுப் பதிவுகளை கொண்டு செல்வது பாராட்டுதற்குரியது எனத் தெரிவித்த அவர், வரும் மே 18 முள்ளிவாய்க்கால் 5 ஆவது ஆண்டு நிகழ்வில் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ''தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற தாரகமந்திரத்துடன் தனது உரையை நிறைவுசெய்தார்.

நிகழ்வின் நிறைவில் பொண்டி தமிழ்ச் சங்கத்தின் நல்வாய்ப்புச் சீட்டு குலுக்கல் இடம்பெற்று வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.

கொடியிறக்கலைத் தொடர்ந்து நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றன. இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
(மெய்வல்லுநர் போட்டி நிகழ்வின் மேலதிக படங்கள் மற்றும் காணொளி இன்று இரண்டாம் பகுதியில் தரவேற்றப்படும்.)
நிகழ்வின் ஆரம்பப் பதிவுகள்...

0 comments

Post a Comment