தமிழில் பழுப்பு மலை அணில் என்றும் ஆங்கிலத்தில் GRIZZLED GIANT SQUIRREL என்றும் அழைக்கப்படும் அணில்கள் வசிக்கும் வனவிலங்கு சரணாலயம் அருகே பட்டாசு தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளதைக் கண்டு இயற்கை ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருவில்லிபுத்தூரில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த பழுப்பு மலை அணில்கள் வாழும் செண்பகத்தோப்பு சாம்பல்நிற அணில் வனவிலங்கு சரணாலயம் . இந்த அணில்களை சர்வதேச வனவிலங்கு அமைப்பு கிட்டத்தட்ட அச்சுறுத்தலுக்கு ஆளாகும் விலங்கு என்று வகைப்படுத்தியுள்ளது.இந்த வகை அணில்கள் மிகவும் அபூர்வமான விலங்காகும்.
இவை தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் மட்டும் இருக்கின்றன என்ற தகவல் இவற்றை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் பழனி மலைகள், சின்னார் வனவிலங்கு சரணாலயம், ஆனமலை புலிகள் சரணாலயம், திருவண்ணாமலை வனப்பிரிவு, தேனி வனப்பிரிவு, சிறுமலை, திருவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு ஆகிய பகுதிகளில் இவை வாழ்கின்றன. இலங்கையில் அனுராதபுரம், கண்டலாமா, மிஹிண்டல் மற்றும் மத்திய மாகாணம், ஊவா மாகாணம் ஆகிய பகுதிகளில் இவை வாழ்கின்றன. இவை பழுப்பு அல்லது சாம்பல் நிறம் கொண்டவை. பெரும்பாலான அணில்கள் பழுப்பு நிறத்தில் காணப்படுவதால் இவை பழுப்பு நிற அணில்கள் என்று அறியப்படுகின்றன.
இவை ஒன்று முதல் 1.8 கிலோ எடை கொண்டவைகளாக இருக்கும். இவற்றின் உடல் மட்டும் 25 முதல் 50 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாகும், அணிலின் உடல் நீளத்துக்கொப்ப நீளமான வாலும் இதற்கு இருக்கும். எனவே நல்ல முதிர்ந்த பழுப்பு அணிலின் வால் உள்ளிட்ட நீளம் ஒரு மீட்டர் இருக்கும். இதனுடைய காதுகள் வட்ட வடிவில் கூர்மையான உச்சி கொண்டதாக இருக்கும். இந்த அணில்கள் மரங்களின் உச்சியில் இரு கிளைகள் சந்திக்கும் இடங்களில் கூடுகட்டி வாழக்கூடியவை. இவை ஒவ்வொன்றும் தனக்கென்று 1.970 சதுர மீட்டர் முதல் 6,110 சதுரமீட்டர் பரப்பளவில் வசித்து வருகின்றன. திருவில்லிபுத்தூரில் இவை வாழும் மலைப்பகுதியை மக்கள் செண்பகத்தோப்பு என்று அழைக்கிறார்கள்.
அதையொட்டியே இந்த சரணாலயத்துக்கு செண்பகத்தோப்பு பழுப்பு மலை அணில் சரணாலயம் என்று பெயரிடப்பட்டுள்ளது. வடக்கே ஆண்டிபட்டி மலைகளும், தெற்கே திருநெல்வேலி மாவட்டமும். கிழக்கே ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் நகரங்களும், கிழக்கே பெரியாறு நதியின் நீர்ப்பிடிப்பு பகுதியும் எல்லைகளாக அமைந்துள்ளன. இது சுமார் 485 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தைச் சுற்றி பெரியாறு புலிகள் காப்பகமும், மேகமலை அடர்வனக்காடும், சிவகிரி அடர்வனக்காடும் அமைந்துள்ளன. இந்த செண்பகத்தோப்பு பகுதிக்குள் உள்ள மலைகளின் உயரம் சமவெளிப்பகுதியில் 110 மீட்டரில் தொடங்கி கோட்டைமலையில் 2010 மீட்டரில் முடிகிறது. இந்த சரணாலயத்தில் கல்லார், முல்லைப்பெரியாறு அணை நீர், பெரியாறு தவிர நரகையாறு, பச்சையாறு, மாங்கார், கோவிலாறு, பைரகுதிரையாறு ஆகிய பருவமழை ஆறுகள் உள்ளன.
செண்பகத்தோப்பு சரணாலயத்தில் இன்னும் ஏராளமான விலங்குகள் உள்ளன. மான் வகைகள், காட்டு யானைகள் பலவகையான குரங்குகள், பறக்கும் அணில்கள், காட்டெருமை சிறுத்தை, நீலகிரி மான்கள், வரையாடுகள், காட்டுப்பூனைகள், காட்டுப்பன்றிகள் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட விலங்குகள் இங்கு வாழ்கின்றன. 2008ம் ஆண்டில் இங்கு முப்பது சிங்கவால் குரங்குகள் இருந்தன. இவை இப்போது அதிகரித்துள்ளன என்று கூறுகின்றனர். வரையாடுகளின் எண்ணிக்கை 220 ஆக அதிகரித்துள்ளது என்று 2011ம் ஆண்டு கணக்கீடு கூறுகிறது. இங்கு ஏராளமான பறவைகளும் வாழ்கின்றன. அத்துடன் குளிர்காலங்களில் நாடோடிப்பறவைகளும் இங்கு வந்து குவிகின்றன. ராஜநாகம் உள்ளிட்ட பதினெட்டு வகை ஊர்வன உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தரையிலும், நீரிலும் வாழும் பத்து வகை உயிரினங்கள் இங்கு உள்ளன. இங்கு ஒரு மூலிகைப்பயிர்கள் காப்பகப்பகுதியும் உள்ளது .
இது தனிப்பாறையில் அமைந்துள்ளது. பதினைந்து வகை வியாதிகளைக் குணப்படுத்த பளியர் மலைவாழ் மக்கள் பயன்படுத்தும் 69 வகை மூலிகைகள் இங்கு உள்ளன. மனிதன் – யானை முரண்பாடுகள், மனிதர் காடுகளை ஆக்கிரமித்தல், விலங்குகள் மேய்ச்சல், காட்டுத்தீ ஆகியவை இங்கு உள்ள காப்பக பாதுகாப்பு பிரச்சனைகளாகும். சரணாலயப் பகுதிக்குள் ஏழு முதல் பத்து கோவில்கள் உள்ளதால் ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர். சரணாலயத்தில் உள்ள வனவிலங்குகளைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோட்டைமலை, வத்திராயிருப்பு பகுதிகளில் மேய்ச்சல் விலங்குகள் அனுமதிக்கப்படுவதில்லை. பழங்கள் சேகரிப்பு, வன உற்பத்திகளை சேகரிக்கும் பணி ஆகியவற்றை குத்தகைக்கு விடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் வனவிலங்குகளின் உணவுப் பாதுகாக்கப்படுகிறது. மண்வளம் பாதுகாப்பு, மரங்கள் பாதுகாப்பு, மழைநீர் அறுவடை ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன. யானைகள் பாதை அமைப்பதற்கு ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த சரணாலயம் மதுரையில் இருந்து சுமார் 80கி.மீ, தொலைவிலும் விருதுநகரில் இருந்து 45 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. திருவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் சரணாலயம் அமைந்துள்ளது. முடுங்கியாறு, புதுப்பட்டி, முதலியார் ஊத்து ஆகிய இடங்களில் வன இலாகா ஓய்வு அறைகள் உள்ளன. சரணாலயம் அருகே தனியார் தங்குமிடங்களும் உள்ளன.
-

0 comments
Post a Comment