டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கி நூறாண்டுகளை கடந்துவிட்டது. சென்ற நூற்றாண்டின் மிக மோசமான கடல் விபத்தாக வரலாற்றில் பதிவான அந்த சம்பவம் உலக அளவில் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றது.
இந்நிலையில், 1912ல் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் இருந்து கிடைத்த போஸ்ட் கார்ட் உணவு "மெனு" இங்கிலாந்தில் ஏலம் எடுக்கப்பட உள்ளது.
டைட்டானிக் கப்பலின் இரண்டாம் வகுப்பில் பயணித்த பயணிகளுக்கு பரிமாறப்பட்ட உணவு வகைகளின் பெயர் பட்டியல் அடங்கிய அந்த "மெனு´ 1,35,000 டொலர்கள் ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த மெனுவில் டைட்டானிக் மூழ்குவதற்கு 3 நாட்களுக்கு முன்னர் அதாவது ஏப்ரல் 11, 1912 அன்று காலை உணவுக்குரிய விபரங்கள் குறிப்பிட்டிருந்தது.
அந்த பட்டியலில் பழங்கள், ரோல்டு ஓட்ஸ், மசித்த உருளைக்கிழங்கு, மீன்கள், கோதுமை கேக்குகள், மேப்பிள் சிரப், டீ மற்றும் காபி போன்ற உணவுகளின் பெயர்களும் இருந்தன.
இந்த போஸ்ட்கார்ட் மெனுவானது குயின்ஸ்டவுன் துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்பட்டவுடன் கப்பலிலுள்ள சலூன் ஸ்டீவர்ட் ஜேக்கப் கிப்பன் இங்கிலாந்தில் இருந்த அவரது கேர்ள் பிரண்டான மிஸ்.எல்.பேனிக்கு கடிதமாக அனுப்பியிருந்ததாகும்.
அந்த மெனுவின் பின் பகுதியில் ´இப்போது வரையில் நல்ல பிரயாணம்´ என்று எழுதப்பட்டிருந்தது அனைவரது உள்ளத்தையும் உருகச் செய்துள்ளது.
பாதுகாப்பாக இதுவரை பராமரிக்கப்பட்டு வந்த இந்த மெனு இன்னும் மூன்று நாட்களில் இங்கிலாந்திலுள்ள ´வில்ட்ஷையர்´ என்ற இடத்தில் ஏலத்தில் விடப்பட உள்ளது. இந்த ஏலத்தை ´ஹென்றி ஆல்ட்ரிஜ் அன்ட் சன்´ என்ற ஏல நிறுவனம் நடத்துகிறது.
டைட்டானிக்கின் இரண்டாம் வகுப்பு மெனுக்கள் கிடைப்பது மிகவும் அரிதானது என்றும், இதுபோன்ற "மெனு" இரண்டு மட்டுமே உலகில் உள்ளதாகவும் அந்த ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 comments
Post a Comment