கடந்த மாதம் வோல்கோகிராட் நகர தொடருந்து நிலையத்தில் தற்கொலை படையை சேர்ந்த பெண் ஒருவர் வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். இதில் 15 பேர் பலியாயினர். மறுநாள் காலை பேருந்து ஒன்றில் ஒரு பெண் மனித வெடிகுண்டாக வந்து குண்டுகளை வெடிக்க செய்தார். அதில் 10 பேர் பலியாயினர். இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள செச்சனிய ஆயுதக் குழுவொன்று, ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டால் ஆப்கானிஸ்தான், சோமாலியா, சிரியா உட்பட உலகம் முழுவதும் முஸ்லிம்கள் சிந்திய இரத்தத்திற்கு ஒரு பரிசு கொடுக்கப்படும் என்றும், போட்டியைக் காண வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கும் ஒரு பரிசு கிடைக்கும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை ரஷ்ய மொழி பேசும் இரு ஆண்கள் எச்சரிப்பது போன்ற காட்சிகளை உள்ளடக்கிய காணொளியையும் வெளியிட்டுள்ளனர்.
இதையடுத்து சோச்சி மற்றும் வோல்கோகிராட் நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சோஷி நகரின் பாதுகாப்பு பணிக்காக மட்டும் சுமார் 37 ஆயிரம் இராணுவ மற்றும் காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்களுக்காக தங்கும் வசதி, கழிப்பறைகள் வசதி உள்பட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஒலிம்பிக் குடியிருப்பு வளாகத்தில் செய்துள்ள கழிவறை ஏற்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒரு கழிவறையில் அடுத்தடுத்து மேற்கத்தேய கழிப்பறைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த படங்கள் இணையத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிபிசி நிருபர் ஸ்டீவ் ரோசன்பெர்க் இக் கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு பக்கத்துக்கு பக்கத்தில் 2 கழிப்பறைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதைப் படம்பிடித்து வெளியிட்டுள்ளார். அதை பார்த்து பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
ரஷ்யாவில் ஓரின சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓரின சேர்க்கையாளர்களுக்காக ஒரே இடத்தில் 2 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று ஒருவர் கிண்டலடித்துள்ளார். மற்றொருவர் அதிபர் புட்டின், பிரதமர் மெத்வடேவ் இருவருக்குமான கழிப்பறை என்று கூறியுள்ளார். இன்னொருவர் ஒருபடி மேலே சென்று ஒரு கழிப்பறையில் புட்டின் படத்தையும் ஒரு கழிப்பறையில் மெத்வடேவ் படத்தையும் வைத்து வெளியிட்டு விட்டார். இன்னொருவர் புட்டின் கழிப்பறை செல்லும் போது பாதுகாப்பு செல்லும் அதிகாரிக்கும் சேர்த்து கழிப்பறை வைத்துள்ளனர் என்று கிண்டலடித்துள்ளார்.
இவ்வளவு நடந்தும், 2 கழிப்பறை விவகாரம் குறித்து சோச்சி ஒலிம்பிக் சபை எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்துவருகின்றது. ஆனால் இப்படிப்பட்ட கழிப்பறைகள் ரஷ்யாவில் புதிதில்லை என்று ரஷ்யாவைச் சேர்ந்த ஆர் ஸ்போர்ட்ஸ் என்ற செய்தி நிறுவத்தின் ஆசிரியர் வசிலி கோனோவ் விளக்குகிறார். அங்குள்ள கால்பந்து ஸ்மைதானங்களில் இப்படித்தான் எப்பவுமே கழிப்பறைகள் இருக்குமாம். பிபிசி காரரக்ள் ஏன் இதை பெரிதுபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. இதில் என்ன நகைச்சுவையைக் கண்டு விட்டார். இதேபோன்ற கழிப்பறைகளை ரஷ்ய கால்பந்து மைதானங்களில் நீங்கள் சாதரணமாகப் பார்க்கலாம் என்றும் சாடியுள்ளார்.
இதற்கிடையே, ஒலிம்பிக் போட்டிக்கு அமெரிக்கா பாதுகாப்பு கருதி முழு ஒத்துழைப்பு தர தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறும்போது, பெப்ரவரி 6ம் திகதிமுதல் 23ம் திகதிவரை ரஷ்யாவில் நடைபெற உள்ள குளிர் கால ஒலிம்பிக் போட்டிக்கு பாதுகாப்பு அளிக்கும்படி ரஷ்யா கேட்டதை அடுத்து ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்று பாதுகாப்பு வழங்க அமெரிக்க ஒத்துக்கொண்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அமெரிக்க பாதுகாப்பு செயலர் சக் ஹெகல், ஜனவரி 4ம் திகதி அளித்துள்ளார் எனக் கூறியுள்ளார். எனினும் அதேவேளை, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின்போது அமெரிக்க குடிமக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அவர்களை தாயகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் சௌக் காஹெல் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வருமாறு சீனப் பிரதமர் ஷிச்சின்பிங்கிற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து அவரின் அழைப்பை ஏற்று பெப்ரவரி மாதம் 6ம் திகதி குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்துகொள்ள சீன பிரதாமர் ரஷ்யா செல்வார் என சீன வெளியுறவுத்துறை அதிகாரபூர்வமாக தெரிவித்தது. ஆனால் அவரது முழுமையான சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் விவரம் வெளியிடப்படவில்லை.

0 comments
Post a Comment