பிரித்தானியாவின் லண்டனில் வசிக்கும் 15 வயதான மாணவி ஒருவர் அதி விரைவாக புதிர் ஒன்றினை தீர்த்து உலக கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரியாக மாறியுள்ளார். தீபிகா ரவிச்சந்திரன் என்ற சிறுமியே இந்த கின்னஸ் சாதனையை தனக்குச் சொந்தமாக்கியுள்ளார். 250 துண்டுகளைக் கொண்ட அமைப்பை ஒன்று சேர்க்கும் ‘ஜி.வி.ஆர் ஹஸ்பிரோ பஸ்ல்’ எனும் புதிரை 13 நிமிடங்கள் 7 விநாடிகள் 51 நொடிகளில் தீர்த்து இச்சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இதன்போது நிமிடத்துக்கு சுமார் 18 துண்டுகளை இணைத்துள்ளார் தீபிகா.
இந்த புதிரானது சாதாரணமாக சதுரம் அல்லது நீள் சதுர அமைப்புகளை இணைப்பது போன்றல்ல கடினமான அமைப்புகளை இணைக்க வேண்டுமாம். இந்த முயற்சியின்போது யுனிசெப்புக்காக நிதியும் திரட்டப்பட்டுள்ளது. இச்சாதனையை தனது 12 ஆவது ஏற்படுத்து முயற்சித்த தீபிகா 30 விநாடிகளில் அதனைத் தவறவிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி இங்கிலாந்தில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நாளில் தனது இரண்டாவது முயற்சியில் வெற்றிபெற்று கின்னஸ் சாதனையை தன் வசப்படுத்தியுள்ளார். சிறுவயதிலிருந்தே இதுபோன்ற புதிர்களுக்கு விடை காண தீபிகாவின் தாய் உதவியுள்ளார்.
இது குறித்து தீபிகாவின் தாய் கீதா ரவிச்சந்திரன் கூறுகையில், ‘அவரது தாயாக இது மிகச் சிறந்த அன்னையர் தின பரிசாகும். ஒரு பெற்றோரோகா தீபிகாவிடம் இதற்கு மேல் நாங்கள் கேட்க முடியாது. தனக்கு மட்டுமன்றி அவரது பாடசாலை, அவரது சமூகம், குடும்பம் மற்றும் அவரைச் சுற்றி இருப்பவர்கள் அனைவருக்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார்.


0 comments
Post a Comment