காதலித்தபோது செய்த செலவை திருப்பித் தரவேண்டும் என்று வேறு திருமணம் செய்த காதலி மீது காதலன் பொலிசில் புகார் செய்துள்ளார். ஹைதராபாத் பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இந்த இருவரும் முதலில் நண்பர்களாக பழகினர். பின்னர் நட்பு காதலாக மாறியது.
இருவரும் சுமார் 2 ஆண்டுகளாக பூங்கா, திரையரங்கம், ஷாப்பிங் மால்கள், கோயில், குளங்கள் என சந்தோஷமாக சுற்றினர். காதலன் தன் அன்பின் அடையாளமாக காதலிக்கு பல்வேறு பரிசுப் பொருட்களையும் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் அப்பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயித்தனர். இந்த விடயம் தெரிந்த காதலன், அந்த திருமணத்தை நிறுத்த பல்வேறு வழிகளை கையாண்டுள்ளார். ஆனால் பலனில்லை. காதலியும் ‘என்னை மறந்து விடு’ என் ஒரு வரியில் கூறியுள்ளார்.
இந்நிலையில் அப்பெண்ணுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தான் செலவு செய்த சுமார் ரூ. 2 லட்சத்தை தனக்கு வாங்கித் தரவேண்டும் என்று என்று ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் அந்த இளைஞர் புகார் செய்துள்ளார்.
இந்த புகாரை பார்த்து திகைத்த பொலிசார், செய்வதறியாது அந்த இளைஞருக்கு புத்திமதி கூறினர். ஆனாலும் புகாரை திரும்பப் பெற அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதுவே ஒரு பெண்ணுக்கு நடந்திருந்தால், என்னை சும்மா விட்டிருப்பீர்களா? இந்தப் புகாரை பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுங்கள்.
இதுபோன்று மற்ற பெண்கள் நடந்துகொள்ளக் கூடாது என பொலிசாருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதனால் ஹைதராபாத் பொலிசார் என்ன வழக்குப் பதிவு செய்வது என்று குழம்பிப்போய் உள்ளனர்.


0 comments
Post a Comment