Pages

Saturday, June 7, 2014

Zooவிலே ஒரு விநாயகர்!

பிறிஸ்பேன் நகரத்தில் இருந்து வடக்கே சுமார் 82 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஸ்டீவ் எர்வினின் ஆவுஸ்திரேலியா ஜூவிலே ஜம் என்று அமர்ந்திருகிறார் ஒரு 15 அடி உயர விநாயகர்.  பிள்ளையாரின் யானைத் தலையப் பார்த்து இவர்கள் தவறாக விலங்கியல் பூங்காவில் கொண்டு வந்து நிறுவி விட்டார்களோவென ஒரு கணம் மனம் பதைக்கத் தோன்றும்.  அருகே சென்று பார்த்தால் அழகான, கருத்தாழம் மிக்க ஒரு விளக்கத்தையும் எழுதி வைத்திருக்கிறார்கள் இந்த விலங்கியல் பூங்காவின் பராமரிப்பாளர்கள்.

அருகில் எழுதப்பட்டிருக்கும் விநாயகரின் மகத்துவம்.

அதன் தமிழாக்கம் இப்படியாக வருகிறது:

விநாயகருக்கு வாழ்த்துக் கூறுவோம்!

இது யானைத்தலையுடைய, தடைகளை நீக்கும் வல்லமை பொருந்திய  இந்துக் கடவுள்.

அது சரி..., ஏன் யானைத் தலை?

யானை காட்டிலுள்ள தழைகளளையும் மரங்களையும் புறம் தள்ளி பாதையை வகுத்து முன்னேறும் வல்லமை கொண்டது.  இந்துக்கள் விநாயகர் யானையைப்போல வாழ்க்கைப்பாதையில் தடைகளையும் துன்பங்களையும் நீக்கி வாழ வழிகாட்டுவார் என நம்புகிறார்கள்.

யானையின் பெரிய கால் தடங்கள் எனைய சிறிய விலங்குகளின்  கால் தடங்களை அழித்துவிடும்.  தடைகளை நீக்குபவரான விநாயகர் வாழ்க்கைப் பயணத்தை சொகுசாக ஆக்கித் தருவதில் வல்லவர்.

யானைகள் புத்தி சாதுரியத்துக்கு பெயர் போனவை.  விநாயகரின் யானைத்தலை  விக்கினங்களை புத்தி சாதுரியத்தால் அகற்றுவதையும் பிரதிபலிக்கின்றது.

அப்புறம், அந்த எலி எதற்கு கூட உட்கார்ந்து இருக்கிறது?

எலிகளுக்கு இருளில் நன்கு பார்வை தெரியும். விநாயகரின் வாகனமாகிய எலி, மனிதனை அறியாமை என்னும் இருளில் இருந்து வெளிச்சத்துக்கு கொண்டுவரும்.”
இந்துக்கள் விநாயகர் வழிபாடின்றி எந்த காரியமும் தொடங்கமாட்டார்கள்.  இந்துக்களில் எத்தனை பேருக்கு இந்த விலாவாரியான விளக்கம் தெரிந்திருக்கும்?  (எனக்கு மேலோட்டமாக மட்டுமே தெரிந்திருந்த்து!)
பல்லின கலாச்சாரங்களை மதித்து ஊக்குவிக்கும் இன்னாட்டில், இவ்வளவு ஆர்வமெடுத்து ஒரு அந்நிய மதக் கடவுளுக்கு மதிப்பளித்து, இந்த விநாயகரையும் அவருடய மகத்துவத்தையும் காட்சிப் படுத்தியிருப்பது பெருமையும் வியப்பயும் ஒருசேர அளிக்கிறது. 
அப்பனே விநாயகா, உன் தாழ் பணிந்து என் சிறுமுயற்சியை தொடங்குகிறேன்.  நீ வழி காட்டு.

0 comments

Post a Comment