சாருவி டிசைன் லேப் (http://cdl.tv/) என்ற தனியார் அமைப்பு, தாங்கள் தயாரித்துள்ள ஹனுமான் அனிமேஷன் படத்துக்காக, துளசிதாசரின் ஹனுமான் சாலிசா என்ற 40 வரிப் பாடலைப் பாடி பிரபலப்படுத்தியது. அப்போது, அந்த நிறுவனத்துக்குத் தோன்றிய வித்தியாசமான கருத்தின் விளைவாக, 16,500 மணிகள் மூலம் ஹனுமான் வடிவம் ஒன்று உருவாக்கப்பட்டது. வெவ்வெறு நீள அகலங்களில் மணிகளைக் கோத்து, அவற்றை மேலிருந்து கீழாக கட்டித் தொங்கவிட்டு, அவற்றுக்கு ஒரு உருவம் வருமாறு அமைக்கப்பட்டது. இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த உருவம், நம் மனதுக்கு ரம்யமாக இருக்கும் வகையில் ஒலியெழுப்பும்.
இந்த ஹனுமனின் பாதுகைகளைத் தொட்டால் போதும்... அதன் அதிர்வலைகள் ஒரு மணிக்குக் கடத்தப்பட்டு, பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து மணிகளும் ஒலிக்கும். அந்த ஒலி, மனதுக்கு ரம்யமாக இருப்பதுடன், நம்மை தியான நிலைக்கும் அழைத்துச் செல்கிறது. மணி ஒலி என்பது இந்து மதத்தில் முக்கியமான ஆன்மிக நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
ஹனுமான் சாலீஸா அனிமேஷன் படத்தின் விளம்பரத்துக்காக இது அமைக்கப்பட்டாலும் இது மக்கள் மனதில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், பெரும்பாலானோர் இதனை வணங்கி, ரசித்துச் சென்றனர்.
26 அடி உயரத்தில் மணிகளால் ஆன இந்த ஹனுமான் வடிவம், மிகச் சிறந்த கலைநுணுக்க வேலைபாடாகக் கருதப் படுகிறது. இதற்காக, பொறியாளர்கள் 48 மணி நேரத்துக்கும் மேல் உழைத்துள்ளனர்.

0 comments
Post a Comment