Pages

Saturday, May 31, 2014

இலவச உணவுக்காக விமானச் சீட்டை 300 முறை மாற்றியவர்!


சீனாவில் விமான நிலையத்தில் கிடைக்கும் இலவச உணவை உண்பதற்காக தனது விமானப் பயணச் சீட்டை 300 முறை கால நீட்டிப்பு செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சீனாவில் விமானத்தில் செல்ல முதல் வகுப்பு விமானப் பயணச் சீட்டு முன்பதிவு செய்ய, வாங்க, பயணத் திகதியை மாற்ற வரும் பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. மேலும், முன்பதிவு செய்த  பயணச் சீட்டின் திகதியை மாற்றிக் கொள்ள கட்டணம் கிடையாது.
இந்நிலையில், ஜியான் விமான நிலையத்தில் கிழக்குச் சீனா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் முன்பதிவு செய்த ஒருவர், அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் பகுதிக்கு சென்று தினமும் இலவச உணவைச் சாப்பிட்டு வந்துள்ளார். இதற்காக தனது முதல் வகுப்பு பயண சீட்டின் திகதியை 300 முறை மாற்றம் செய்தும் வந்துள்ளார். ஷான்சி மாகாணத்தில் இவ்வாறு தனது பயணச்சீட்டைக் கொடுத்து கால நீட்டிப்பு செய்ய முயன்றபோது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கிழக்கு சீனா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டனர். அப்போது அந்தப் பயணச் சீட்டுக் குறித்த விபரங்களை கணினியில் பார்த்த போது ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த ஓராண்டில் மட்டும் 300 முறை கால நீட்டிப்பு செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது முக்கிய பிரமுகர்கள் பகுதியில் இலவசமாகக் கிடைக்கும் தரமான உணவை சாப்பிடுவதற்காக இவ்வாறு நூதன முறையில் கால நீட்டிப்புச் செய்து வந்ததாக அவர் தெரிவித்தார். கிழக்குச் சீனா ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணத் திகதியை மாற்றி கொள்ள கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை என்பதைத் தெரிந்து கொண்டு இவ்வாறு செயல்பட்டதாகத் தெரிவித்தார். வேறு வழியில்லாமல் அவரது பயணச் சீட்டைத் திரும்பப்பெற்றுக் கொண்டு அதற்கான கட்டணத்தை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

0 comments

Post a Comment